Monday, December 19, 2016

உன்னை நினைக்கையிலே....

என் சுவாசத்து சூடு
குளிர்ந்து நெடுநாள் ஆயிற்று

என் தேகத்தின் உணர்வு
சுவாலை தீண்டாமலும் தூண்டாமலும்
இருப்பதால் அது இருளை
தன் வசமாக்கி கொண்டது
 
என் இதயம்
இரத்த ஓட்டத்தினூடே  
கொண்டிருந்த
எண்ண ஓட்டம் தனக்கு தானே
விலங்கிட்டு கொண்டு
விடுதலையடைய மறுக்கிறது


என் கூந்தலின் மயிர் நாண்கள்
தன் வாசத்தை மறந்த நாள்
எந்த நாள் என கேட்டுகொண்டன

என் முகத்தில்
புன்னகை பூக்க மகிழ்ச்சி எனும்
மொட்டுவிட மறுக்கிறது
என் மனம்

என் அங்க அசைவுகளும்
என் ஆசை கனவுகளும்
அடங்கி ஒடுங்கி முடங்கவிட்டன

ஆனாலும்!!

ஏன்......??
என் உடலில் இருக்கும்
செந்நீர் துளிகளை விட
என் விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகள்
அதிகரிக்கிறதே..?? ஆர்பெடுக்கிறதே..??

வயல்வீடு விற்று
அயல்நாடு சென்று
அரும்பாடு பட்டு
அந்நாட்டு கிளர்ச்சிக்கு
பலியாடு ஆனவனே
என் ஆண் அவனே
உன்னை நினைக்கையிலே.... 




ஏன் இந்த மாற்றம்

எதிர்பாராமல்
எதிர்வந்தவளின் உதடுகள் உதிர்த்தது
அரசியல்வாதிகளின் பாசாங்கு
சிரிப்புகளை

வானம்போல்
அவள் வாழ்க்கையும்
கருணை காட்டவில்லை
வறட்சி மேலோங்கி இருந்தது

உடலிலும்
உணர்விலும்

குறத்தி கையிலிருந்த
ஒலைத்தோடு கூட உதவவில்லை
அவள் காதேறி கமலமாய் மலர

சிரங்குடையோன் அரிப்பில் உருவான
மேடுபள்ள திட்டுக்கள் அவள்
மேனி ஒத்திருந்தது

மருதாணி மீறிய  
மாயாஜாலம் காலம்
அவள் முடிகள்
பொன் நிறங்களாகி இருந்தன       

சலவைக்கு உதவாத
கந்தல் துணி
அவள் உடலின் அலங்கார உடை

அன்றைய பதினாறு வயது
என் பவளமல்லியிடம்
அதை கேட்க நினைத்தது மனம்

நடை கட்டி நகர்ந்தது
இந்த உயிருள்ள பிணம்

அந்த கேள்வியை கேட்காமலும்
வெந்த மரத்திற்கு
வெந்நீர் ஊற்றாமலும் 

வயோதிகக் கொடுமை

எட்டி இருக்கும் அந்த
பெட்டிக் கடை ஓடி
எட்டணா கொடுத்தெனக்கு
சுட்டக் கடலை வாங்கித் தின்னது சுகம்

மொட்டுமல்லி பறித்து
ஒட்டுத்தின்னையில் கொட்டி
கட்டு நூலில் கட்டி
ரெட்ட ஜடையில் வைத்து –பள்ளிக்கு
எட்டி வெட்டி நடந்தது சுகம்

குட்ட பாவாடை விடுத்து
நெட்ட தாவணியுடுத்தி –பச்ச
மட்டையில் மறைந்து நான்
எட்டிய பூ பருவம் சுகம்

கெட்டி மேளங்கொட்டி
பட்டுத் துனியுடுத்தி
மெட்டி விரல் அணிந்து
கட்டிலறை கண்டது சுகம்


முட்டி வரும் வயிறை
தொட்டுத் தடவியன்பால்
கட்டுச்சோறு உண்டே  
பட்ட வலிமறந்து பிள்ளைபேறு பெற்றது சுகம்

தொட்டில் துனி விலக்கி
வட்ட முகம்நீட்டி
சுட்டிக் குழந்தை ‘கெக்’ என சிரிக்கும்
கெட்டிச் சிரிப்பில் உருகி -அதன் நெற்றி    
முட்டி முட்டி முத்தமிட சுகம்  

பட்ட உழைப்பிற்கு
கிட்டிய பலனாய் -பாடசாலை
தொட்டு கல்வி பல கற்று
பட்டம் பெற்றுவரும் பிள்ளை பார்ப்பது சுகம்

கொட்டிய பற்களால்
ஒட்டிய கன்னத்துடன் 
தட்டுத்தடுமாறும் வயதில் –பிள்ளை 
திட்டி திட்டியே தெருவில்
விட்டுப்போன நிலைஎண்ணி
சொட்டிய கண்ணீருடன் -மனம்
சுட்டுப் பெரும் அல்லல்
பட்டு அழுகிறது என் வாடிய அகம்

காற்றென வந்தவனே

காற்றென வந்தவனே -எனை
கடந்து சென்றுவிடு

என்வாழ்க்கை நிறைய
துளிகளால் நிரம்பிக்கிடக்கிறது
அது வெற்றி எனும் சொல்லுக்கு
உரிமை கேட்கிறது

எனை ஈன்றதிலிருந்து
இன்றுவரை உதிரம் வடித்தே

பல பிணிகள் விரட்டி
இந்த வயதுவரை அழைத்து வந்தாள்  
என் தாய் தன் பாசம் நிறைந்த
கண்ணீர்த்துளிகளால்

பல படிகள் உயர்த்தி
இந்த கல்லூரிவரை அழைத்துவந்தார்
என் தந்தை தன் பாசம் நிறைந்த
வியர்வைத் துளிகளால் 

எனக்கு கனவுத்துளிகள் இருக்கிறது
அது கடலின் துளிகளாய் இருக்கிறது

அந்த கரை என்னும்
இரையை கவ்விபிடிக்கும்
விலங்கின் வேகத்தில் பாய்கிறது
என்னுடலில் கல்வி தாகம் எனும்
உதிரத்துளிகள்

உன் வாழ்க்கையும்
நிறைய துளிகளால் நிரம்பிக்கிடக்கிறது
அது வெற்று எனும் ஒற்றை சொல்லில்
வாழ்ந்து திளைக்கிறது

காலம் எனக்கு வேண்டும் –நான்
அதில் கரைந்து கிடக்கவேண்டும் 

காற்றென வந்தவனே
காதல் கடிதம் தந்தவனே -எனை
கடந்து சென்றுவிடு

அந்த காற்றைப்போலவே 

நீளும் வரிசைகள்

மேய்ந்து கொண்டிருந்த
கவுதாரிக் குஞ்சுகள்
படபடத்த சத்தத்துடன்
ஓடி பறந்துவிட வேண்டாமென்று
என் வாகனத்தின்
வேகத்தை குறைத்தபோது

கருவாட்டுத் தவளைகள் மட்டும்
வாழ்ந்த வற்றிய குளத்தின்
அருகில் நின்று
“தண்ணி இருக்குதா தம்பி..?”
என கேட்ட முதியவருக்கு




எச்சிலை விழுங்கி
என் வறண்ட தொண்டைக்கு
ஈரத்தை ஏற்படுத்திவிட்டு
“இல்லை” என
பதில் சொல்லி முடித்தேன்  

வந்தே விட்டது வரிசை
வங்கியிலிருந்து
எனது வண்டிவரை

வரிசையில் நின்றவர்களில்
இடையிடையே
ஜிஹெச் மருந்து வாடையும்
ரேசன் கடை மண்ணெண்ணெய்
வாடையும் அதிகம் வீச
அவர்கள் விறைப்பாக
நின்றிருந்தார்கள்

வெண்சட்டை வேந்தர்களின்
கையிலிருந்த வங்கிபுத்தகம்
விசிரியென உருமாறியிருந்தது 

ஜியோ சிம் வாங்க போனவர்களின்
கால்கள் நடனமிட்டுகொண்டிருக்க

ஒருவர் மட்டும் மூச்சு
எழைக்க ஓடிவந்து நின்றார்
அவரிடம் உப்பு வதந்தி
ஒட்டிகொண்டிருந்தது..

Sunday, December 18, 2016

நம்பிக்கையே பலம்

கால இருக்கையின்
நீண்ட அமர்வில்
நீள் நெடு ஓடையின் அருகே
ஆலக்கரு
அது தன்  அன்னைமடி   
சுமந்த சிவந்த கர்ப்பப்பையில்
நிறைந்து இருந்தது

அங்கே..
சிவந்த கர்ப்பம் சுவைக்க
சிருகுருவிகள் கூட   
அன்னையும் விட்டுவிட்டது

கரு கர்ப்பப்பை வெளியேறி
சிறுகுருவியின்  
அகப்பையில் அகப்பட்டு கொண்டது
எங்கோ நெடுந்தூரம் பறந்து பின்
எச்சமென தங்கிய இடத்தில்
தன் பின்வாய் வழியே
துப்பி குருவியும் விட்டுவிட்டுச் சென்றது

குருவி கொடுத்த தான பிசுபிசுப்பில்
ஒட்டிய இடத்தை
கெட்டியாய் பற்றிக் கொண்டக் கரு

கடும் காற்று
சுடும் வெப்பம்
கொடும் குளிர் என
கோரக் கரங்கள் ஏற்றது  

மழை உமிழ்ந்த உமிழ்நீரில்
முகம் கழுவி
துடிப்புடன் எழுந்து
விருட்சமென வளர்ந்த
வித்துக்குத்தான் தெரியும்
நம்பிக்கையே பலம் என்று ......


சம்மதம் சொல்வாயா……













            
              தலைவன் கூற்று

சம்மதம் சொல்வாயா என் சங்குவிழி தேவதையே
சந்துவழி நடந்துவந்து என் அங்கம் நுழைந்தவளே
தாகம் எடுத்ததென தண்ணீர் கேட்டதற்கோ –உன்
கோபம் சொன்னதடி என் தேகம் இல்லையென

பூவில் இருக்கும் அந்த பூநாகம் உன்சொல்லோ
சாவை கொடுக்குதடி இந்த பூவை இல்லையென
நாவில் இருக்கும் அந்த கடுஞ்சொல்லை நீக்கிவிட்டு
பூவைநீ காட்டிடடி பொலிவான உன் முகத்தை

நாளும் நினைத்திருந்து நல்தேகம் இளைத்துவிட்டேன்   
வானின் பொன்நிலவு வந்திறங்கும் கையிலென
தாவணி என்நிலவே தண்ணீர் குடத்துடனே –என் மனையில்
ஆவணி மாதமதில் அடியெடுத்து வைப்பாயோ

காதில் ஒலிக்கிறதோ என் காதல் வலிமொழிகள்
பாதி இறந்துவிட்டேன் என் நாதி நீயெனவே  
மீதி உயிரதையோ மீட்டிடடி என்னவளே –வெறும்  
சாதி கதைதள்ளி சம்மதம் உள்ளதென

வேடம் களைவாயா வெண்மதியே என்விதியே
கூடல் கொடுத்திடடி என் குறையுள்ளம் நிறைவதற்கே
பாடல் புரிந்ததென நீ சூசகமாய் சொல்லிடுவாய் -இந்த  
பாடகனின் மனம்குளிர உன் சாகச பார்வையிலே


              தலைவி கூற்று

நித்தம் வழிநின்று விழிநோக்கும் கண்ணாளா
சத்தம் ஏதுமின்றி கண் யுத்தம் செய்பவனே
வித்தை பலநூறு உன் விழிகளுக்கு தெரியுமெனில் –என்
ரத்த நாளமெல்லாம் யார் நினைவோ நீ கூறு

நாணம் கொண்டவளை கோபம் வென்றிடுமோ
தாகம் உள்ளதென பெரும் வியூகம் வகுப்பவனை –பொய்
வேகம் கொண்டவளாய் விழித்தேன் நன்றே –உன்
மோக எண்ணமதை நான் முறித்தேன் அன்றே..

மாகோலம் நானிடுவேன் அதில் மதிநுட்பம் சேர்த்திடுவேன்
மணக்கோலம் மாதமதை மறைவாக மொழிந்திடுவேன் –அது  
ஆவணி மாதமதோ ஆராயும் திறனுண்டோ –அன்றி
பங்குனி மாதமதோ பகுத்தறியும் திறனுண்டோ? கண்டறிவீர்  

கள்ள விழியவனே எனை அள்ள நினைத்துருகி –உன்னுடல்   
பள்ளம் ஆனதென என் உள்ளம் சொல்லியதே
உள்ள உரையதுவோ முள்ளென குத்துகையில் –நான்
அள்ளி அணைப்பேனா உனை தள்ளி விடுவேனா  

வேடம் தரிக்கவில்லை விலக நினைக்கவில்லை
கூட நினைத்துருகி நான் வாடி கிடக்கின்றேன்
பாடி பிளைப்பவரே உடல் வாடிக் கிடப்பவரே –நான்
சூடி இருக்கின்றேன் உன் நினைவை மல்லிகையாய்