எட்டி இருக்கும் அந்த
பெட்டிக் கடை ஓடி
எட்டணா கொடுத்தெனக்கு
சுட்டக் கடலை வாங்கித் தின்னது
சுகம்
ஒட்டுத்தின்னையில் கொட்டி
கட்டு நூலில் கட்டி
ரெட்ட ஜடையில் வைத்து –பள்ளிக்கு
எட்டி வெட்டி நடந்தது சுகம்
குட்ட பாவாடை விடுத்து
நெட்ட தாவணியுடுத்தி –பச்ச
மட்டையில் மறைந்து நான்
எட்டிய பூ பருவம் சுகம்
கெட்டி மேளங்கொட்டி
பட்டுத் துனியுடுத்தி
மெட்டி விரல் அணிந்து
கட்டிலறை கண்டது சுகம்
முட்டி வரும் வயிறை
தொட்டுத் தடவியன்பால்
கட்டுச்சோறு உண்டே
பட்ட வலிமறந்து பிள்ளைபேறு
பெற்றது சுகம்
தொட்டில் துனி விலக்கி
வட்ட முகம்நீட்டி
சுட்டிக் குழந்தை ‘கெக்’ என
சிரிக்கும்
கெட்டிச் சிரிப்பில் உருகி
-அதன் நெற்றி
முட்டி முட்டி முத்தமிட சுகம்
பட்ட உழைப்பிற்கு
கிட்டிய பலனாய் -பாடசாலை
தொட்டு கல்வி பல கற்று
பட்டம் பெற்றுவரும் பிள்ளை
பார்ப்பது சுகம்
கொட்டிய பற்களால்
ஒட்டிய கன்னத்துடன்
தட்டுத்தடுமாறும் வயதில் –பிள்ளை
திட்டி திட்டியே தெருவில்
விட்டுப்போன நிலைஎண்ணி
சொட்டிய கண்ணீருடன் -மனம்
சுட்டுப் பெரும் அல்லல்
பட்டு அழுகிறது என் வாடிய அகம்
No comments:
Post a Comment