காற்றென வந்தவனே -எனை
கடந்து சென்றுவிடு
என்வாழ்க்கை நிறைய
துளிகளால் நிரம்பிக்கிடக்கிறது
அது வெற்றி எனும் சொல்லுக்கு
உரிமை கேட்கிறது
எனை ஈன்றதிலிருந்து
இன்றுவரை உதிரம் வடித்தே
பல பிணிகள் விரட்டி
இந்த வயதுவரை அழைத்து வந்தாள்
என் தாய் தன் பாசம் நிறைந்த
கண்ணீர்த்துளிகளால்
பல படிகள் உயர்த்தி
இந்த கல்லூரிவரை அழைத்துவந்தார்
என் தந்தை தன் பாசம் நிறைந்த
வியர்வைத் துளிகளால்
எனக்கு கனவுத்துளிகள்
இருக்கிறது
அது கடலின் துளிகளாய்
இருக்கிறது
அந்த கரை என்னும்
இரையை கவ்விபிடிக்கும்
விலங்கின் வேகத்தில் பாய்கிறது
என்னுடலில் கல்வி தாகம் எனும்
உதிரத்துளிகள்
உன் வாழ்க்கையும்
நிறைய துளிகளால்
நிரம்பிக்கிடக்கிறது
அது வெற்று எனும் ஒற்றை
சொல்லில்
வாழ்ந்து திளைக்கிறது
காலம் எனக்கு வேண்டும் –நான்
அதில் கரைந்து
கிடக்கவேண்டும்
காற்றென வந்தவனே
காதல் கடிதம் தந்தவனே -எனை
கடந்து சென்றுவிடு
அந்த காற்றைப்போலவே

No comments:
Post a Comment